தவிக்கும் தாளவாடி விவசாயிகள்`கருப்பன்' யானையின் தொடரும் அட்டகாசம்;300 வாழைகள்-50 தென்னை மரங்கள் சேதம்
தாளவாடி அருகே கருப்பன் யானை, 300 வாழைகள், 50 தென்னை மரங்களை சேதம் செய்தது. தொடரும் அட்டகாசத்தால் விவசாயிகள் தவிக்கிறார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே கருப்பன் யானை, 300 வாழைகள், 50 தென்னை மரங்களை சேதம் செய்தது. தொடரும் அட்டகாசத்தால் விவசாயிகள் தவிக்கிறார்கள்.
கருப்பன் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் மற்றும் தீவனங்களை தேடி படையெடுக்கின்றன.
இதில் குறிப்பாக கிராம மக்களால் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஆண்டு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்த தொடங்கியது.
தின்று ருசி கண்டது
வாழை, கரும்பு, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்களை கருப்பன் யானை தின்று ருசி கண்டுவிட்டதால் நாள்தோறும் தோட்டங்களை தேடி வந்தது. தொடர்ந்து பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் தோட்டங்களில் காவலுக்கு இருந்தார்கள்.
இதில் 2 விவசாயிகளை 6 மாதத்துக்கு முன் கருப்பன் யானை மிதித்து கொன்றது. அதனால் கருப்பன் யானையை மயக்க ஊசிபோட்டு பிடிக்கவேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள்.
மயங்கவில்லை
இதையடுத்து வனத்துறையினர் 3 முறை பொள்ளாச்சி டாப்சிலிப் மற்றும் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து 5 கும்கி யானைகளை ஜீர்கள்ளி வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். கும்கி யானைகளின் உதவியுடன் கருப்பன் யானைக்கு இதுவரை 6 முறை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்திவிட்டனர். ஆனால் கருப்பன் யானை மயங்காமல் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் ஓடிவிட்டது.
இதனால் கும்கி யானைகள் திரும்ப முகாம்களுக்கே கொண்டு செல்லப்பட்டன. இதற்கிடையே கருப்பன் யானையின் அட்டகாசம் நாள்தோறும் தொடர்கிறது. பயிர்கள் நாசமாவதை கண்டு விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.
50 தென்னை நாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜோரகாடு பகுதியில் கருப்பன் யானை தாமோதரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த தென்னை மரங்களின் ஓலைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி கருப்பன் யானையை விரட்டினர். ஆனாலும் 50 தென்னை மரங்களை நாசம் செய்த பின்னரே யானை அங்கிருந்து சென்றது.
300 வாழைகள் நாசம்
தாமோதரனின் தோட்டத்தில் இருந்து வெளியே சென்ற கருப்பன் யானை காட்டுக்குள் செல்லவில்லை. அந்த பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது.
அங்கு சுமார் 300 வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்த பின்னர் அதிகாலை 4 மணி அளவிலேயே தானாக காட்டுக்குள் சென்றது.
கருப்பன் யானையால் கண்முன்னே பயிர்கள் நாசம் போவதை கண்டு விவசாயிகள் கண் கலங்குகிறார்கள். வனத்துறையினர் கருப்பன் யானையை கட்டுப்படுத்துவார்களா?, சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்கள்.