பக்தர்களுக்கு மோர் வினியோகம்


பக்தர்களுக்கு மோர் வினியோகம்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியாக சென்று வருகின்றனர். கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பக்தர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் வெயிலுக்கு இதமாக பக்தர்களுக்கு இலவசமாக மோர் வினியோகம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக படிப்பாதை வழியே வரும் பக்தர்களுக்கு இடும்பன் சன்னதி அருகே மோர் வழங்கப்பட்டது.

தற்போது மலைக்கோவிலின் வெளிப்பிரகாரத்திலும் இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. தள்ளுவண்டியில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மோர் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் புளியோதரையும் இலையால் ஆன கிண்ணத்தில் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதம் முதல் சுக்கு காபி வழங்கப்பட்டது. கோடை வெயில் தாக்கத்தை குறைக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. காலை முதல் மதியம் வரை சுமார் 10 ஆயிரம் பேருக்கு மோர் வழங்கப்படுகிறது என்றனர்.


Next Story