காவிரி கூட்டு குடிநீர் 20-ந் தேதி முதல் வினியோகம்


காவிரி கூட்டு குடிநீர் 20-ந் தேதி முதல் வினியோகம்
x

வேலூர் மாநகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் 20-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் 20-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

குடிநீர் வினியோகம் தடை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் சேண்பாக்கம் பாலாற்றில் பொதுப்பணி துறையின் சார்பில் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருவதால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இதையொட்டி வேலூர் மாநகராட்சி, காட்பாடி ஒன்றிய பகுதிகள் என பல்வேறு பகுதிகளுக்கு செய்யப்படும் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் நீராதாரமான பாலாறு குடிநீர், பொன்னை குடிநீர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேயர் ஆய்வு

இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார்.

அதன்படி பொன்னை அருகே தெங்கால் ரோடு பகுதியில் உள்ள பொன்னையாறு குடிநீர் நிரேற்று நிலையத்தை அவர் ஆய்வு செய்தார். அங்கிருந்து வேலூர் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

20-ந் தேதி முதல் வினியோகம்

இங்கிருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது காவிரி கூட்டுகுடிநீர் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இங்கிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு நாளைக்கு 3 மின் மோட்டார்கள் மூலம் 60 லட்சம் லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படும். இதில் 2 மோட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது. ஒரு மோட்டார் மூலம் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

மற்ற மோட்டார்களையும் சரிசெய்யும் பணி நடக்கிறது. விரைவில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

சேண்பாக்கத்தில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் முடிவடைய உள்ளது. 20-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனுடன் மக்களின் தேவைக்கேற்ப உள்ளூர் நீராதாரம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், உதவி கமிஷனர்கள் செல்வபாலாஜி, சுப்பையா, கவுன்சிலர் சதீஷ்குமார்பாச்சி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story