விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்
தலைஞாயிறு பகுதியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
வாய்மேடு:
தலைஞாயிறு வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தலைஞாயிறு வட்டாரத்துக்கு உட்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பனங்காடி, நீர்முளை, கொத்தங்குடி ஆகிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் தரமான நெட்டை, குட்டை ரக தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தென்னங்கன்றை ரூ.125 செலுத்தி வாங்கி கொள்ளலாம்.தென்னையில் கலப்பினம் என்பது புறத்தோற்ற பண்புகளில் மாறுபட்ட நெட்டை குணத்தையும், குட்டை இனத்தையும் சேர்ந்து உருவாக்கப்படுபவை. தாய் மரங்களை விட இவ்வாறு இரு ரகங்களின் கலப்பின சேர்க்கையில் உருவாகும் மரங்களில் பூக்கள் விரைவில் பூக்க ஆரம்பித்துவிடும். மகசூல் அதிக அளவில் இருக்கும். அதோடு, நல்ல தரமான கொப்பரைத் தேங்காயும், எண்ணெயும் கிடைக்கும். எனவே விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் நெட்டை, குட்டை ரக தென்னை ரகங்களை வாங்கி பயன் அடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.