ரேஷன் கடையில் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வினியோகம்
திருவல்லிக்கேணியில் உள்ள ரேஷன் கடையில் கருவிழி சரிபார்ப்பு முறையில் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் வினியோகம் செய்யும் திட்டத்தின் தொடக்க விழா, திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தில் உள்ள டி.யூ.சி.எஸ். 13-வது ரேஷன் கடையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், 'ஐரிஷ்' என்ற கண் கருவிழி சரிபார்ப்பு கருவி சோதனை செய்த பெண்களுக்கு உணவு பொருட்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க பெண்களிடம், விற்பனையாளர் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரவைத்து 'ஐரிஷ்' என்ற கையடக்கக்கருவி வழங்கப்பட்டது. அதனை கண் அருகில் வைத்து பார்த்தவுடன் 10 நிமிடங்களில் ரேஷன் கார்டுக்கான உண்மையான பயனாளி ஆம், இல்லை என்பதை தெரிவித்து விடுகிறது. உண்மையான பயனாளியாக இருந்தால் உடனடியாக பொருட்கள் வழங்கப்படுகிறது.
கைரேகை பதியவில்லை
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி, நிருபர்களிடம் கூறியதாவது:-
வயல்களில் வேலை பார்த்துவிட்டு வந்தால் கைரேகை அழிந்துவிடுவதால் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் உணவுப்பொருட்கள் பெறுவதில் சிரமம் இருக்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். கைரேகை பதியவில்லை என்றாலும் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் வழங்கினால், அதனை சரிபார்த்து பயனாளிகள் யாரிடம் பொருட்களை வழங்க கோரிக்கை விடுக்கிறார்களோ? அவர்களிடம் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டு இருப்பது நடைமுறையில் உள்ளது.
இருந்தபோதும் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் நகரப்பகுதியில் சென்னையில் திருவல்லிக்கேணியிலும், புறநகர் பகுதியில் அரியலூர் மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கைரேகை பதியவில்லை என்றாலும் உணவு பொருட்களை வழங்கும் சோதனை அடிப்படையிலான திட்டமாகும். பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மாநிலம் முழுவதும் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் விரிவுப்படுத்தப்படும்.
13.42 லட்சம் புதிய ரேஷன் கார்டு
கேரளா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் முழுமையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. கண் கருவிழி சரிபார்ப்புக்கு 10 முதல் 20 நிமிடங்களில் சரிபார்த்துவிட முடியும். ரேஷன் கார்டு தேவைப்படும் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.