குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்; கலெக்டர் தகவல


குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்; கலெக்டர் தகவல
x

நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் 21-ந் தேதியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் 21-ந் தேதியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய குடற்புழு நீக்க நாள்

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் அல்பெண்ட சோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் நாளை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மேலும் பள்ளிக்கு செல்லாத சிறாருக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மகளிருக்கும், அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது.

2 நாட்கள்

நெல்லை மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 49 ஆயிரத்து 813 சிறார்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 844 மகளிருக்கும் நாளை நடக்கும் முகாமில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. எனவே முகாம்களில் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மகளிரை அழைத்து வந்து குடற்புழு நீக்க மாத்திரைகளை பொதுமக்கள் அனைவரும் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story