குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்


குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
x

குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோக நிகழ்ச்சியை பேச்சிப்பாறை ஊராட்சியில் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோக நிகழ்ச்சியை பேச்சிப்பாறை ஊராட்சியில் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

மாத்திரை வினியோகம்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, குமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தச்சமலை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.‌

தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 1-19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் குழந்தைகள் பயனடைவர்

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகளிலும் மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிசெல்லா குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது உள்ள கல்லூரி செல்லா பெண்களுக்கும் ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் சுமார் 6 லட்சத்து 19 ஆயிரத்து 455 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள 75 ஆயிரத்து 43 பெண்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வருகிற 16-ந் தேதி மாத்திரை வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கடனுதவி வழங்க ஆலோசனை

முன்னதாக மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் தச்சமலை பகுதி மலைவாழ் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக பல்வேறு தொழில்கள் தொடங்க கடனுதவிகள் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் சுயஉதவி குழுவினருடன் ஆலோசனை நடந்தது.

நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story