பாசி, தூசி துகள்கள் கலந்த குடிநீர் வினியோகம்


பாசி, தூசி துகள்கள் கலந்த குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 13 May 2023 4:43 PM IST (Updated: 13 May 2023 4:46 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே பாசி, தூசி துகள்கள் கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்பங்களுக்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீருக்காக பயன்படும் கிணறுகளை சுத்தம் செய்யப்படாமலும், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பாசி மற்றும் தூசு துகள்கள் படிந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் கருப்பாகவும், அதிகளவில் பாசி, தூசு துகள்கள் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த குடிநீர் குடிக்கும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணறு மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story