2,242 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கல்


2,242 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கல்
x

2,242 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் நல மையங்களில் 6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட சத்தான பிஸ்கட் வழங்கும் நிகழ்வு துறைமங்கலம் குழந்தைகள் நல மையத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கடுமையான ஊட்டச்சத்து குறையாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட சத்தான பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், கோதுமை, மைதா, வேர்க்கடலை, கேழ்வரகு, சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய், சர்க்கரை, வைட்டமின், மினரல் உள்ளிட்ட உடலுக்கு சத்து தரக்கூடிய, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கூடிய வகையில் இந்த பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 490 மையங்களிலும் மொத்தம் 31 ஆயிரத்து 585 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 242 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோர்கள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாளொன்றிற்கு 60 கிராம் வீதம் 25 நாட்களுக்கு 1.5 கிலோ கிராமும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 30 கிராம் வீதம் 25 நாட்களுக்கு 750 கிராமும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 25 நாட்களுக்கு ஒரு முறை இந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்படும். அந்த குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக அவர்களை மாற்றுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார அலுவலர் பிரேமா, சித்த மருத்துவ அலுவலர் விஜயன், 9-வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா மணிவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story