ரத்த சோகையை தடுக்கவே ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்-கலெக்டர் பேச்சு
ரத்த சோகை நோயை தவிர்க்கவே ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது என ஜோலார்பேட்டை அருகே பகுதி ரேஷன்கடையை திறந்து வைத்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
ஜோலார்பேட்டை
ரத்த சோகை நோயை தவிர்க்கவே ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது என ஜோலார்பேட்டை அருகே பகுதி ரேஷன்கடையை திறந்து வைத்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
ரேஷன்கடை திறப்பு விழா
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, கவுண்டப்பனூர் பகுதியில் பகுதி நேர ரேஷன்கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன், தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் எஸ்.பி.முருகேசன் வரவேற்றார். பகுதி நேர ரேஷன்கடையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்து பேசியதாவது:-
நமது மாவட்டத்தில் மே 1-ந் தேதி முதல் செறிவூட்டப்பட்ட நமது ஆரோக்கியத்திற்காக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. கிராம பகுதியில் ரத்த சோகை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெண்களுக்கு இரத்த சோகை அதிகமாக தாக்கும் வாய்ப்பு உள்ளது. ரத்த சோகை நோயினால் கருவுற்ற தாய்மார்கள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. மூச்சுத் திணறல் ஏற்படும். அதிக நேரம் பணிகளை செய்வதற்கு இயலாது, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி பிறக்கின்ற குழந்தை இரத்த சோகையினால் பாதிக்கப்படும். அதை கருத்தில் கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்ட சத்து சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை சாதாரண அரிசியுடன் கலவை செய்து சேர்க்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
செறிவூட்டப்பட்ட அரிசியை தண்ணீரில் போட்டால் மிதக்கும். அதனால் அனைவரும் பிளாஸ்டிக் அரிசி என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த அரிசி அரைத்து மருந்து பொருட்கள் சேர்ப்பதால் அதனுடைய அடர்த்தி குறைவாக இருப்பதால் அது நீரில் மிதக்கும். சிறிது நேரத்தில் அது நீருக்குள் சென்று விடும். இதனால் சுவை மாறாது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) முத்தையன், துணை பதிவாளர் பாலசுப்பிரமணியன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதிஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜாஜெகன், மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொன்னேரி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பி.சம்பத் நன்றி கூறினார்.
நம்ம ஊரு சூப்பர்
அதனை தொடர்ந்து பொன்னேரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் ஆய்வு மேற்கொண்டு நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தொடங்கி வைத்தார்.