தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 932 மாணவர்களும், 10 ஆயிரத்து 191 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 123 பேர் எழுதியிருந்தனர். இதில் 8 ஆயிரத்து 22 மாணவர்களும், 9 ஆயிரத்து 727 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 749 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.81 சதவீதம் ஆகும். பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர்கள் உயர்கல்விக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியம் என்பதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அந்தந்த பள்ளிகளில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் தலைமை ஆசிரியரின் கையொப்பமிடப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் உயர்கல்விக்காக விண்ணப்பிக்கும் போது இந்த மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வினியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண் சான்றிதழை வாங்க நேற்று மாணவிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.