விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்
வனத்துறை சார்பில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கொடைக்கானல் தாலுகா பெரும்பள்ளம் வனச்சரக பகுதியில் ஏராளமான பட்டா நிலங்கள் உள்ளன. இதில் சவுக்கு, வேங்கை, பலா உள்ளிட்ட பல்வேறு மரங்களை நடவு செய்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை திட்டம் மற்றும் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மூலையார் பகுதியில் மரக்கன்றுகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்கு தேக்கு, மகாகனி, சில்வர்ஓக், சிவப்பு சந்தனம், பலா, குமிழ் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறுகையில், மூலையார் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நர்சரியில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு 49 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இந்த மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்றார்.