தூத்துக்குடியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்


தூத்துக்குடியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
x

தூத்துக்குடியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து கலைக்குழு மூலம் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நிகழ்ச்சி தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

அடித்தளம்

அப்போது அவர் பேசுகையில், 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதற்கு அரசு அளித்து வரும் சலுகை காரணம் ஆகும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. ஆகையால் அரசு பள்ளிக்கூடங்களில் படிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் அமைய நீங்கள் அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. இதில் ரூ.18 ஆயிரம் கோடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த பள்ளிக்கூடத்துக்கு பெற்றோர் நன்கு ஆதரவு அளித்து வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களில் பள்ளி மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆகையால் குழந்தைகளை பெற்றோர் நன்கு கண்காணிக்க வேண்டும். சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

கலெக்டர் செந்தில்ராஜ்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசும் போது, தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். ஆர்வமும், திறமையும் உள்ள குழந்தைகள் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தாலும் நன்றாக படிக்கும். அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். மதிப்பெண் அதிகம் பெறுவது மட்டுமே வெற்றி கிடையாது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் கிடையாது. தோல்வி வெற்றியின் முதல் படி. ஆகையால் மாணவர்கள் தாங்கள் விரும்பியதை படிக்க வேண்டும். மற்றவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நாம் படிக்க கூடாது. வெற்றிக்கும், தோல்விக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் வெற்றிக்கான அடித்தளமாக அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், உதவி அலுவலர் செல்வலெட் சுஷ்மா, மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் ஜேசுராஜன், செல்வக்குமார், ரோஸ்லின் ராஜம்மா, பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா வெலல்சியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, புள்ளியியல் அலுவலர் சுடலைமணி, ஆதவா டிரஸ்ட் பாலகுமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் கூடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர், மேயர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story