ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம்; பா.ஜ.க. குற்றச்சாட்டு
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
பா.ஜ.க.வை சேர்ந்த ஏழை மக்கள் உணவு நல்வாழ்வு திட்டத்தின் (கரிப் கல்யாண் அன்ன யோஜனா) மாநில பொறுப்பாளரும், தேனி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான ராஜபாண்டியன், பெரியகுளத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொரோனா காலகட்டத்தில் உணவுக்கான உத்தரவாதமாக கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை காலமான தற்போது ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக பெரியகுளம் நகர், ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகிக்கும் ரேஷன் அரிசி சமைக்கக்கூடிய அளவில் இல்லை. தீபாவளி பண்டிகை நேரத்தில் இதுபோன்ற தரம் இல்லாத உணவுப்பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். பெரியகுளத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, தரமற்ற அரிசியை வினியோகம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். மாவட்ட கலெக்டர் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பா.ஜ.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.