நெல்லை மாநகராட்சியில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம் மூலம் ஒரு மாதத்தில் தண்ணீர் வினியோகம்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
நெல்லை மாநகராட்சியில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
நெல்லை மாநகராட்சியில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிைல வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், கீதாஜீவன் ஆகியோர் பேசினர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகள், நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடிநீர் திட்ட பணிகள், குடிநீர் வினியோகம், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
குடிநீர் திட்ட பணிகள்
கோவில்பட்டி நகராட்சியில் தினசரி சந்தை ரூ.10 கோடியில் அமைக்கப்படும். திருச்செந்தூர் நகராட்சியில் பஸ் நிலைய விரிவாக்கம், மார்க்கெட் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்செந்தூரில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.295 கோடியில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
ஆலங்குளம் யூனியனில் 31 கிராமங்கள், பாப்பாக்குடி யூனியனில் 17 கிராமங்கள் மற்றும் முக்கூடல் பேரூராட்சி பகுதிகளுக்கு ரூ.50½ கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
கீழப்பாவூர் பேரூராட்சி, பாப்பாக்குடி, கடையம் பகுதிகளைச் சேர்ந்த 163 கிராமங்களுக்கு ரூ.46 கோடியே 55 லட்சத்தில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 94 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மானூர், பாளையங்கோட்டை யூனியன்களில் 170 கிராமங்களுக்கு ரூ.32.40 கோடியில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 94 சதவீதம் நிறைவு பெற்றது.
ஆலங்குளம், சங்கரன்கோவில் யூனியன்களில் 147 கிராமங்களுக்கு ரூ.31.32 கோடியில் நடைபெறும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி மற்றும் 63 கிராமங்களுக்கு ரூ.28 கோடியே 21 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளநீரை வெளியேற்ற...
கடல்நீரை குடிநீராகும் திட்டத்திற்கு அதிக செலவாகிறது. இங்கு அந்த திட்டம் சாத்தியமற்றது. இங்குள்ள கடற்கரை பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். ஒப்பந்த பணியிடங்களை நிரப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு தூத்துக்குடிக்கு ரூ.84 கோடியும், சென்னைக்கு முதல்கட்டமாக ரூ.930 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தற்போது கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து நிறைவேற்ற மீண்டும் டெண்டர்விட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரம் செறிந்த மண்
கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுைகயில், நெல்லை மாவட்டமானது தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண். தாமிரபரணி தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கலாம், தீர்த்தம் போன்றதாகும் என்றார்.
கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், நெல்லை மாநகராட்சியில் 807 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் உள்ளது. 57 கி.மீ. மண் ரோடு உள்ளது. இதில் 37 கி.மீ. தார் சாலையாக மாற்றித் தர வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், ரிங் ரோடு அமைத்து தர வேண்டும். ஒரு மண்டலத்திற்கு ஒரு பொக்லைன் எந்திரம் என 4 பொக்லைன் எந்திரங்களை வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், சதன் திருமலைக்குமார், மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
பின்னர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, டீன் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.