பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சியின் மாவட்ட மாநாடு
திண்டுக்கல்லில் பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சியின் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. மாநாட்டுக்கு மாநில பொதுச்செயலாளர் என்.பசும்பொன் பாண்டியன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் ரஞ்சித்போஸ் முன்னிலை வகித்தார்.
மாநாட்டில், ஏழை எளிய மக்களை பாதிக்கும் கியாஸ் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் மூக்கையாதேவரின் உருவபடத்தை திறப்பதோடு, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும்.
திண்டுக்கல்லில் நேதாஜி, முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் முழு உருவச்சிலைகளை நிறுவ வேண்டும். பழனியில் உள்ள நேதாஜி சிலையை பராமரிக்க வேண்டும். திண்டுக்கல்லில் பூட்டு தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் மற்றும் சடையாண்டி கோவில் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் ராஜா வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.