மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்; வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் 3 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசின் முடிவுகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் 3 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசின் முடிவுகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வெங்கடேசன் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், கூடுதல் கலெக்டர் சரவணன், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறதா என கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கும், அரசு திட்டங்களின் நோக்கத்திற்கு ஏற்றபடி முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 124 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் "மக்கள் சந்திப்பு இயக்கம்" நடத்தப்பட்டுள்ளன.
கல்விக்கடன் முகாம்
மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் அதிகளவில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு ரூ.126 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகளவில் கல்விக்கடனுதவி வழங்கி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் மாவட்டமாக மதுரை திகழ்கிறது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கென மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் சுமார் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏறத்தாழ 2600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஒரே சமயத்தில் அதிகளவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத்துறை உள்ளிட்ட 14 துறைகள் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசின் அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அரசின் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.