வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்


வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
x

தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது

தஞ்சாவூர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுப்பு வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவுடிகள் கத்தியை எடுத்து கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதால் ஒரு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இது வணிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்களுக்கு பாதிப்பு, இடையூறு ஏற்பட்டால் கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டோம். வணிகர்களை அச்சுறுத்துபவர்கள் மீது இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போலீசார் மெத்தனபோக்கை கடைபிடித்தால் முதல்-அமைச்சரிடம் நேரில் புகார் கொடுக்கவும் தயாராக உள்ளோம்.

சொத்து வரி

சொத்து வரி கடுமையாக உயர்ந்துள்ளது. இதை குறைக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இதேபோல, செஸ் வரி, பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி கொண்டு அலுவலர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். அதன் நிலைப்பாடு குறித்த கருத்துகளை பதிவு செய்து, துறை சார்ந்த அமைச்சரை ஏற்கெனவே சந்தித்து விளக்கங்களை தந்துள்ளோம். மேலும், முதல்-அமைச்சரை சந்தித்து விரைவான தீர்வை எடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் கடைகளை எல்லாம் இடித்துவிட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட்டு பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டாலும், இன்னும் பல கடைகள் திறக்கப்படாமலேயே உள்ளது. எனவே அரசு நியாயமான வாடகையை நிர்ணயம் செய்து அனைத்து வணிகர்களும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

கட்டுப்பாடுகள்

ஆன்லைன் வர்த்தகம், அன்னிய நாட்டு சக்திகளின் பெரிய நிறுவனங்கள், நம் நாட்டின் பெரிய நிறுவனங்களும் கடுமையாக கால் பதித்து சில்லறை வியாபாரிகளை அகற்றி வருகின்றனர். சூதாட்டத்துக்கு முதல்-அமைச்சர் தடை விதிப்பதுபோல, வியாபாரிகளை பாதுகாப்பதற்கு சீரிய முயற்சி எடுத்து, ஆன்லைன் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மண்டல தலைவர் செந்தில்நாதன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் மற்றும் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.







Next Story