மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
தரகம்பட்டி அருகே மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிப்பட்டி அரபு கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் தலைவர் சலாஹீத்தீன் ஜமாலி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அரசு ஹாஜி மற்றும் கல்லூரியின் முதல்வர் சிராஜீத்தீன் அஹமது வரவேற்று பேசினார். கூட்டமைப்பின் பொருளாளர் முகமது தஸ்ஸாலின் வரவு-செலவுகளை தாக்கல் செய்தார். ஹாஜிகளின் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் தமிழக அரசு சமீபத்தில் வாரிசு சான்றிதழ் சம்பந்தமாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வாரிசாக இருந்து வந்த பெற்றோர்கள் தவிர்க்கப்பட்டு கணவன், மனைவி, பிள்ளைகள் மட்டுமே வாரிசுதாரர்கள் என்ற அரசாணை இஸ்லாமிய சட்ட வாரியத்திற்கு எதிராக உள்ளதால் முந்தைய நிலை முறைப்படி பெற்றோர்களும் வாரிசுதாரர்களாக சேர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு மாவட்ட ஹாஜிகள் வழங்கும் வாரிசுதாரர்கள் யார் என்கிற பரிந்துரையை தாசில்தார் ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 22 அரசு மாவட்ட ஹாஜிகள் கலந்துகொண்டனர்.