மாவட்ட அளவிலான கலை போட்டிகள்; கலெக்டர் தகவல்
நெல்லையில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாகக் கொண்டு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் நெல்லை மாவட்ட அளவிலான போட்டிகள் நெல்லை கலை பண்பாட்டு வளாகத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறவுள்ளது.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகியபோட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராகஅதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.