திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான தடகள போட்டி
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஒலிம்பிக் கொடியேற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த 535 மாணவர்களும், 525 மாணவிகளும் கலந்துகொண்டனர்.
போட்டிகள் 14, 17, 19 வயதின் அடிப்படையில் நடைபெற்றது. 100 முதல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.