மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
திண்டுக்கல்லில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசாக சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே நடந்த இப்போட்டியில், மாணவர்களுக்கான 13 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மாணவர்களுக்கான 15 மற்றும் 17 வயதுகுட்பட்டோர் பிரிவில் 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 130, பெண்கள் பிரிவில் 60 என மொத்தம் 260 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஆண்களுக்கான போட்டிகளை மாவட்ட கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கான போட்டிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் போட்டிபோட்டுக்கொண்டு சைக்கிளில் சீறிப்பாய்ந்தனர்.
வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள்
இதில் ஆண்களுக்கான 13 வயது பிரிவில் புனித மரியன்னை பள்ளி மாணவன் லிங்கேஸ்வரன், 15 வயது பிரிவில் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவன் நாகராஜன், 17 வயது பிரிவில் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ராய்ஸ்டன் ஆண்டோ மற்றும் மாணவிகளுக்கான 13 வயது பிரிவில் விளையாட்டு விடுதி மாணவி லலிதாஸ்ரீ, 15 வயது பிரிவில் சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, 17 வயது பிரிவில் விளையாட்டு விடுதி மாணவி தமிழிசை ஆகியோர் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசாக சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதனை பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் விசாகன் வழங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி முன்னிலை வகித்தார். விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழக துணைத்தலைவர் ரத்தினம், செயலாளர் சண்முகம், ஆக்கி சங்க துணைத்தலைவர் ரமேஷ்பட்டேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.