மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
சர்வதேச திறன் போட்டி
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்க ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது தொழிற்திறன் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட, மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி தேனி மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 55 தொழிற்பிரிவுகளில் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பம்
5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டு இருப்பவர்கள். தொழிற் பயிற்சி நிலைய, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டு இருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்க விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதள முகவரியில் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.