மந்தமாக பணிபுரியும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை


மந்தமாக பணிபுரியும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை
x

மந்தமாக பணிபுரியும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்


மந்தமாக பணிபுரியும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் அம்ரித் சரோவர் திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், பருவ மழைக்கு முந்தைய நடவடிக்கையாக மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், நிலுவையில் உள்ள பட்டாக்களை வழங்குதல் மற்றும் இ-சேவை மையங்களின் சேவைகள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் இயக்கம் மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜவஹர் பேசியதாவது:-

2021-22-ம் நிதியாண்டில் நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். 2022-23 நிதியாண்டில் நிலுவையில் உள்ள பணிகளை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு முடிக்கப்பட வேண்டும். மந்தமாக பணிபுரியும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைந்து மேற்கொள்ள வேண்டும்

மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து துறை அலுவலர்களும் பணிகள் குறித்து முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் அடித்தட்டு ஏழை மக்களை சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்வதற்கு பொது மக்களுக்கு உரிய அறிவிப்பு செய்து, மாற்று இடம் வழங்கிய பிறகு அகற்றம் செய்ய வேண்டும். மேலும் இப்பணிகள் குறித்து ஐகோர்ட்டு ஆணையின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாகவும் விரைந்தும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

=============


Next Story