காட்பாடி ரெயில் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
காட்பாடி ரெயில் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் திடீர் ஆய்வு செய்தார்.
காட்பாடி
காட்பாடி ரெயில் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் திடீர் ஆய்வு செய்தார்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
மத்திய அரசின் அக்னிபத் என்ற ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் இது தொடர்பாக வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறையில் ஈடுபடும் சிலர் ரெயில்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார்.
இதனால் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
.
துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலமும், வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் முக்கிய பகுதிகளுக்கு ரெயிலில் சென்று ஒன்று கூடுவதை தவிர்க்கவும், ரெயில் நிலையத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போலீசார் சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார், 2 தனிப்பிரிவு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு காலையில் சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் செல்கிறார்களா? என்று போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் சோதனை செய்தனர். சில இளைஞர்களிடம் அவர்கள் செல்லும் இடம் குறித்து விசாரித்தனர்.
இதேபோன்று விழுப்புரத்தில் இருந்து புருலியா செல்லும் புருலியா அதிவிரைவு ரெயில் பிற்பகல் 2.30 மணிக்கு வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அந்த ரெயிலிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வேலூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஒரிருநாட்கள் சோதனை செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.