10 விதமான மோசடி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளர்கள் ரத்து செய்யலாம்
10 விதமான மோசடி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளர்கள் ரத்து செய்யலாம் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்காக கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை.
10 விதமான மோசடி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளர்கள் ரத்து செய்யலாம் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்காக கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை.
இழந்த சொத்துக்கள்
தமிழகத்தில், இன்றைய நிலவரப்படி மாவட்ட மற்றும் தாலுகா கோர்ட்டுகளில் மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 948 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 712 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும். 7 லட்சத்து 61 ஆயிரத்து 236 வழக்குகள் சிவில் வழக்குகள். இந்த சிவில் வழக்குகளில் பெரும்பாலானவை சொத்து பிரச்சினை தொடர்பானவை.
போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகள் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே தீர்வு கோர்ட்டு மட்டும் தான். எனவே ஆயிரக்கணக்கானோர் மோசடியால் இழந்த தங்களது சொத்தினை மீட்க கோர்ட்டில் வழக்கு போட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
சொத்து முறைகேட்டில் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பது போலி சான்றிதழ்கள் தான். தற்போதைய நிலையில் சொத்துப்பதிவிற்கு தேவையான இறப்பு மற்றும் வாரிசு சான்றுகள், பட்டா போன்றவற்றில் கியூ.ஆர். கோர்டு வசதி உள்ளது. எனவே இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை எளிதாக கண்டறிய முடியும். ஆனால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய முடியாது.
எனவே போலி ஆவணங்கள் அடிப்படையில் பல சொத்துக்கள் உரிமம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆதார் போன்ற வசதி இல்லாததால் ஆள்மாறாட்டம் செய்தும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு உள்ளன. அதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் பத்திரப்பதிவுத்துறையை அணுகினாலும், அந்த பத்திரப்பதிவை பதிவு துறையால் ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கு மட்டுமே இருந்தது. எனவேதான் கோர்ட்டுகளில் இது போன்ற வழக்குகள் அதிகளவில் நிலுவையில் உள்ளன.
சான்றிதழ்கள்
இந்த சூழ்நிலையில் தமிழக அரசு, போலி பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மோசடி பதிவால் பாதிக்கப்பட்ட நடிகை வாணிஸ்ரீயின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சட்டத்தின்படி மாவட்ட பதிவாளர்கள் 10 விதமான பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து தெளிவான விளக்கத்தையும், அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* மாநில அரசு அல்லது சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான சொத்துக்கள்.
* அறநிலையத்துறை மற்றும் மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள்.
* பூமிதான சொத்துக்கள்
* வக்பு வாரிய சொத்துக்கள்
* கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு பின்பு பதிவு செய்யப்பட்ட அனுமதியற்ற மனைகள்,
* பதிவு செய்த ஆவணங்களை தன்னிச்சையாக ரத்து செய்த சொத்துக்கள்.
* ஆள்மாற்றம் செய்து பதியப்பட்ட சொத்துக்கள், இறப்பு-வாரிசு சான்றிதழ்கள், பட்டா-வீட்டு வரி ரசீது உள்பட போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் அதனை பின் தொடர்ந்து செய்யப்பட்ட அனைத்து பதிவுகள்.
* மத்திய-மாநில அரசுகளின் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள்.
* கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள்.
* அரசு கையகப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள்.
பிற மாநிலங்கள்...
மேற்கூறப்பட்ட இந்த பத்திரப்பதிவுகளை இனி மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய முடியும். இனி கோர்ட்டுக்கு செல்ல வேண்டியதில்லை.
எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு செய்ய வேண்டும். அவர் 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார். போலி பத்திரப்பதிவும் ரத்து செய்யப்படும். இதன் மூலம் சொத்தின் உண்மையான உரிமைதாரர்களுக்கு சொத்து சென்றடையும்.
இந்தியாவிலே இது போன்ற ஒரு சட்டம் தமிழகத்தில் தான் முதன்மையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான பணியினை பிற மாநிலங்கள் தற்போது தொடங்கி உள்ளன. ஜம்மூ காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இந்த சட்டம் குறித்து தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றன.