ரூ.12 கோடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
ரூ.12 கோடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், திருவண்ணாமலை மெயின் ரோட்டில் ரூ.12 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 3 அடுக்கு கட்டிடமாக பிரமாண்டமாக கட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் ஷபியுல்லா, ஒன்றியக்குழு தலைவர் திருமதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.