திருவண்ணாமலையில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் - 7-ந் தேதி நடக்கிறது


திருவண்ணாமலையில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் - 7-ந் தேதி நடக்கிறது
x

திருவண்ணாமலையில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது. போட்டி 14, 16, 18 மற்றும் 20 வயது என 4 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு 60 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

அதேபோல் மாணவிகளுக்கு 60 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் பந்தையங்கள், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் 2 தனிநபர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் பங்கேற்பவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது நகராட்சி, மாநகராட்சியில் பிறந்ததற்கான அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் தங்களது நுழைவு படிவத்தினை எம்.எஸ். எக்சல் பார்மட்டில் இணைய வழி மூலமாக entrytvm@gmail.com என்ற முகவரிக்கு சமர்பித்திட வேண்டும். நேரடியாக கொண்டு வரும் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. நுழைவு படிவம் அனுப்பி விடுதற்கான கடைசி நாள் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி வரை ஆகும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்த பிரபு மற்றும் சீனுவாசன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தெரிவித்து உள்ளார்.


Next Story