ஆவின் பால் வினியோகத்தில் குளறுபடி; அதிகாரி பணியிடை நீக்கம்
அம்பத்தூர் பால் பண்ணையில் ஆவின் பால் வினியோகம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மற்றொருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது பால் கெட்டுப்போவதும், வினியோகம் செய்வதில் தாமதமும் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.
கடந்த 3 நாட்களாக அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை. நேற்று 4-வது நாளாக மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் மொத்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் காலை 6.30 மணிவரை வெளியே செல்லவில்லை. பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.
3 லட்சம் லிட்டர் முடங்கியது
இதனால் அண்ணா நகர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மாங்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் 3 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படாமல் முடங்கியது. இதனால் ஆவின் பால் கிடைக்காமல் பொது மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக நீடித்து வரும் இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று பால் முகவர்கள், வியாபாரிகள் சங்கத்தினரும் குற்றச்சாட்டு வைத்தனர்.
விசாரணையில் தினமும் 4 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் பால் இங்கு உற்பத்தி செய்து பாக்கெட்டுகளாக வினியோகிக்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறால் குறித்த நேரத்தில் 2 லட்சம் லிட்டர் வரை தான் பால் உற்பத்தி செய்யப்பட்டது. மீதி 3 லட்சம் லிட்டர் பாலை சேலம், மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனி பால் வினியோகத்தில் குளறுபடியும், தாமதமும் ஏற்படாது என ஆவின் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதற்கிடையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்பத்தூர் பால் பண்ணையில் பணியாற்றி வந்த எந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (பொறியியல்) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் எந்திரகோளாறு மற்றும் பால் வினியோகம் செய்ததில் கால தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.