டிட்கோ நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
டிட்கோ நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.150 கோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதான தொழிற்துறை மேம்பாட்டு முகமையான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் தொழில் பெருந்தட திட்டங்களை செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாக செயல்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
கடந்த 57 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு தொழிற்துறை பூங்காக்கள் உள்பட பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. விவசாய ஏற்றுமதி பகுதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் டிட்கோ உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு தொழில் பெருந்தடம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாகவும் டிட்கோ செயல்படுகிறது.
பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடி
டிட்கோ நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
2021-22-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.252.17 கோடி ஈட்டியுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான (மார்ச் 31-ந் தேதி வரை) நிகர லாபத்தில் 59.48 சதவீத பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடியை தமிழக அரசிற்கு செலுத்துவதாக கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று நடைபெற்ற 57-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் டிட்கோ அறிவித்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கல்
அதன்படி, பங்கு ஈவுத்தொகையான ரூ.150 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.