ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

நாமக்கல்

மோகனூர்:

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு சென்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதும், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், மல்லூர், மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குடும்பத்துடன் திரண்டு, புனித நீராடினர்.

தர்ப்பணம்

அவர்கள் ஆற்றங்கரையோரம் வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பச்சரிசி, காய்கள், அகத்தி கீரை, பூ ஆகியவற்றை படைத்து வழிபட்டனர்.

பின்னர் இறந்து போன முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரிசி மாவில் பிண்டம் பிடித்து, அதனை முன்னோர்களை வேண்டி காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி சென்றனர்.

போலீசார் தடை

பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையோரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், தர்ப்பணம் கொடுக்க பரமத்திவேலூர் போலீசார் தடை விதித்தனர். மேலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியை அடைத்தனர். இதனால் நேற்று தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story