மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்தேவ பிரசன்னத்தின்படி திருப்பணிகள் நடைபெறவில்லை இந்து கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கேரள நம்பூதிரி குற்றச்சாட்டு
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்தேவ பிரசன்னத்தின்படி திருப்பணிகள் நடைபெறவில்லை என்று இந்து கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கேரள நம்பூதிரி குற்றம் சாட்டினர்.
நாகர்கோவில்:
இந்து கோவில் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ஸ்ரீபதி ராஜ், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் நம்பூதிரி விஷ்ணு மற்றும் இந்து கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ரமேஷ், கிருஷ்ணகுமார், கண்ணன் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த 2-6-21 அன்று கோவில் ஊழியர்களின் கவனக்குறைவால் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவிலின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், கேரள தாந்திரிக ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருவதால் மரபுகளை மாற்றாமல் தேவ பிரசன்னம் பார்த்து அதன் அடிப்படையில் கோவில் திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் நம்பூதிரி விஷ்ணு தலைமையில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் தேவபிரசன்னத்தில் கூறியபடி கோவில் திருப்பணிகள் நடைபெறும் என்று கூறினார்கள்.
தேவ பிரசன்னத்தில் கோவில் கருவறையை பெரிதாக்க வேண்டும். கோவில் குளத்தை தூர்வார வேண்டும். காவல் தெய்வங்களுக்கு வாஸ்து நியமப்படி சன்னதி அமைக்க வேண்டும். கோவில் பூஜைகளை சரியான முறையில் நடத்த வேண்டும் மற்றும் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கோவில் திருப்பணிகள் அனைத்தும் தேவ பிரசன்னத்துக்கு மாறாக நடந்து உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளும் நடந்துள்ளதாக தெரிகிறது. தேவ பிரசன்னத்துக்கு மாறாக திருப்பணிகள் செய்வது தெய்வ குற்றமாகும். எனவே கேரள தச்சு சாஸ்திரம் மற்றும் தேவ பிரசன்ன விதிகளின் படி திருப்பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.