வேலூர் மாவட்ட கல்வி அலுவலகம் 3 ஆக பிரிப்பு
வேலூர் மாவட்ட கல்வி அலுவலகம் 3 ஆக பிரிக்கப்பட்டது. அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, தனியார் பள்ளிக்கல்வி என 3 பிரிவாக மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்தி தனித்தனி அலுவலகங்கள் அக்டோபர் 1-ந் தேதி முதல் செயல்படும் என அரசு அறிவித்தது.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) கலெக்டர் அலுவலகத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரே உள்ள அலுவலகத்தில் நேற்று செயல்பட தொடங்கியது. மாவட்டக்கல்வி அலுவலராக எம்.அங்குலட்சுமி பொறுப்பேற்று கொண்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாவட்ட பாரத சாரண சாரணீய அலுவலகத்தில் செயல்பட தொடங்கியது. மாவட்டக்கல்வி அலுவலராக (தொடக்கக்கல்வி) எஸ்.தயாளன் பொறுப்பேற்று கொண்டார்.
மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) அலுவலகம் விருதம்பட்டில் உள்ள மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் செயல்பட தொடங்கியது. இதன் கல்வி அலுவலராக தாம்சன் பொறுப்பேற்று கொண்டார்.
புதிதாக பணியில் சேர்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களை அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர் சங்க தலைவர் திருநாவுக்கரசு, சிவவடிவு, குணசேகரன், ரகுபதி உள்பட பலர் நேரில் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.