நிதிநிறுவன கோட்ட மேலாளர் கைது
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி வழக்கில் நிதிநிறுவன கோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி வழக்கில் நிதிநிறுவன கோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதிநிறுவனத்திற்கு திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால் ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். பலர் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் பணம் செலுத்தினர்.
இந்த நிலையில் இந்த நிதிநிறுவனத்தினர் தங்களை ஏமாற்றி விட்டதாக கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன ்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
கோட்ட மேலாளர் கைது
அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தற்போது வரை ரூ.1¼ கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது தெரிய வந்தது. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிதிநிறுவனத்தின் கோட்ட மேலாளர் சரவணன் (வயது 41) தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் நரசிங்கம்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கு தனது வீட்டில் இருந்த சரவணனை கைது செய்தனர்.
பின்னர் அவரை தஞ்சைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சரவணனை மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
புகார் அளிக்க வேண்டும்
இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் கூறும்போது திருச்சி, கும்பகோணம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை. வீட்டிற்கு தெரியாமல் பணம் செலுத்தியதால் அவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை என தெரிகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தயக்கம் இல்லாமல் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.