தீபாவளி பட்டாசு: சென்னையில் காற்றுமாசு அபாய அளவை தாண்டியது


தீபாவளி பட்டாசு: சென்னையில் காற்றுமாசு அபாய அளவை தாண்டியது
x

தீபாவளி பட்டாசால் சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை தாண்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னை பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த இடங்களில் தீபாவளி தினத்தன்று குறைந்தளவு ஒலி மாசு பெசன்ட்நகரிலும், அதிகளவு ஒலி மாசு திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டது.

பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும் பதிவான ஒலி மாசு, தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை விட மிக அதிக அளவானதாகும்.

காற்று மாசு

காற்று மாசுவை பொறுத்தமட்டில் அன்றைய தினம் பெசன்ட்நகரில் குறைந்தளவும், சவுகார்பேட்டையில் அதிகளவும் இருந்தது பதிவாகி இருந்தது.

பெசன்ட்நகர், தியாகராயநகர் ஆகிய இடங்களில் மிக மோசமான அளவும், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 5 இடங்களில் அபாயகரமான அளவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந் தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது. அதன்படி, தீபாவளி தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 இடங்களில் குறைந்தளவு காற்று மாசு பதிவான பெசன்ட்நகரில் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், அதிகளவு காற்று மாசு பதிவான சவுகார்பேட்டையில் 11 மடங்கு அதிகமாகவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மை, காற்றின் மிகக்குறைந்த வேகம் ஆகிய வானிலை அமைப்பு பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாக அமையவில்லை. இதுவே, சென்னை மாநகர பகுதியில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகமானதற்கு காரணம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story