தீபாவளி பண்டிகை: வியாபாரம் களை கட்டியது: கும்பகோணம் கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகை: வியாபாரம் களை கட்டியது:  கும்பகோணம் கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை உற்சாகமாக வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் களை கட்டியது.

தஞ்சாவூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை உற்சாகமாக வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் களை கட்டியது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மக்கள் பலகாரம் செய்தல், புத்தாடை வாங்குதல், வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குதல், பட்டாசு வாங்குவது, உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர் முறைகளை செய்தல் உள்ளிட்ட பணிகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்களை வாங்கவும் மக்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் தயார் செய்யப்பட்ட புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் கும்பகோணம் நகர பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல்

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக பகுதியான கும்பகோணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ், கார், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் நேற்று கும்பகோணத்துக்கு கூட்டம், கூட்டமாக வந்தனர்.

ஒரே நேரத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கும்பகோணம் நகருக்குள் திரண்டதால், பொற்றாமரை குளம், உச்சிப்பிள்ளையார் கோவில், நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதி, ஆயிகுளம், மடத்தெரு, மகாமகுளம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தரைக்கடைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைக்கு முன்பாக நின்றதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது.

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் உத்தரவின் பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து மாற்றம்

கும்பகோணம் செல்வம் தியேட்டர் முதல் மொட்ட கோபுரம் வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து பஸ்சில் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெகுதூரம் நடந்து வர வேண்டி இருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் கும்பகோணம் நகரம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. துணிக்கடை, நகைக்கடை என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போலீசார் கண்காணிப்பு

உச்சிப்பிள்ளையார் கோவில் முதல் ஆயிகுளம் வரை உள்ள தரைக்கடைகளில் நேற்று நாள் முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட ரகசிய போலீசார்கள் ஆங்காங்கே மாறுவேடத்தில் திருடர்களை கண்காணித்த வண்ணம் இருந்தனர்.


Next Story