கூட்டணி குறித்து மறைமுகமாக பேசும் பழக்கம் தே.மு.தி.க.வுக்கு கிடையாது -பிரேமலதா பேட்டி


கூட்டணி குறித்து மறைமுகமாக பேசும் பழக்கம் தே.மு.தி.க.வுக்கு கிடையாது -பிரேமலதா பேட்டி
x

‘‘கூட்டணி குறித்து மறைமுகமாக பேசும் பழக்கம் தே.மு.தி.க.வுக்கு கிடையாது'', என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணியில் இல்லை

'தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இல்லை, அதனால்தான் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு இல்லை' என்று சிலர் கூறுகிறார்கள். இந்த நிமிடம் வரை தே.மு.தி.க. யாருடனும் கூட்டணியில் இல்லை. யாருடனும் கூட்டணியில் இல்லாதபோது எப்படி எங்களுக்கு அழைப்பு வரும்? எனவே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தே.மு.தி.க. நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நான் தொலைபேசியில் பேசியதாக சில வதந்திகள் பரவி வருகிறது. மறைமுகமாக கூட்டணி குறித்து பேசும் பழக்கம் தே.மு.தி.க.வுக்கு கிடையாது.

விளக்கம் அளிக்க வேண்டும்

'தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்பு ஒரு நிலைப்பாடு என தி.மு.க. இருக்கிறது. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்-அமைச்சர், உரிய பதிலை சொல்லாமல் அடுத்தவர் மீது குறை சொல்லி வருகிறார். எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது குறை சொல்லி வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைகள் அவ்வப்போது நடப்பதுதான். ஆனாலும் தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அமைச்சர் பொன்முடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே அவர் மீது பல ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளன. கவர்னர் அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சரும் தனது வேலையை செய்யட்டும். யார் மீதும் பழி போடாமல் அவரவர் வேலையை சரியாக செய்தால் தமிழ்நாடு நன்றாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள்

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்டு 25-ந்தேதி தே.மு.தி.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story