தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 1,314 பேருக்கு பொற்கிழி -முதல்-அமைச்சர் வழங்கினார்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் 1,314 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
சென்னை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'வேருக்கு விழா' என்ற தலைப்பில் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் 1,314 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 1,314 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார்.
நாட்டு மக்களுக்காக பிறந்தநாள்
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
நம்முடைய தலைவர் கருணாநிதி பிறந்தநாள் என்பது ஏதோ பெயருக்குக் கொண்டாடப்படும் விழா அல்ல. அவர், முதல்-அமைச்சராக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, அவர் பிறந்தநாள் என்பது நாட்டு மக்களுக்காகக் கொண்டாடப்பட்டது.
அண்ணாவின் அறைகூவல்
தி.மு.க.வை அண்ணா முதன்முதலில் இதே வடசென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் 1949-ல் தொடங்கி வைத்தபோது சொன்னார், 'ஆட்சிக்கு வர வேண்டும். பதவிக்கு வரவேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.வாக, அமைச்சர்களாக உட்கார வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி இது அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் நாட்டு மக்களுக்காக ஏழை-எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்காகப் பாடுபடும் பணியாற்றும்' என்று அறைகூவல் விடுத்துத்தான் இந்த இயக்கத்தை அண்ணா ஏற்படுத்தித்தந்தார்.
தி.மு.க. 1949-ல் தொடங்கியபோது நான்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்று சொல்லிவிட்டு வரவில்லை அண்ணா. இன்றைக்குக் கட்சியை தொடங்கியவர்கள் எல்லாம் அடுத்து நான்தான் முதல்-அமைச்சர் என்று சொல்லி வரும் காட்சிகளையெல்லாம் நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.