எடப்பாடி நகரசபை கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
எடப்பாடி நகரசபை கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
எடப்பாடி:
நகரசபை கூட்டம்
எடப்பாடி நகரசபை மாதாந்திர கூட்டம் நேற்று மாலை கூட்ட அரங்கில் நடந்தது. நகரசபை தலைவர் டி.எஸ்.எம். பாஷா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சசிகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடப்பாடி நகராட்சியில் 30 வார்டுகளுக்குமான துப்புரவு பணிகள், புதிய குடிநீர் குழாய் அமைத்தல், கழிவுநீர் வெளியேற்றம், புதிய சாலை அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதம் நடந்தது.
நகரசபையில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.முருகன் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இந்த திட்டத்தால் நகரசபைக்கு நிதி இழப்பு ஏற்படும் என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றார். மேலும் குமாரபாளையம், பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கழிவுகளை எடப்பாடி பகுதியில் சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தால் நகர்ப்பகுதியில் மாசு ஏற்படும் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தள்ளு முள்ளு
அப்போது பதில் அளித்து பேசிய நகரசபை தலைவர் மன்ற தலைவர் பாஷா, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
நகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைப்பது குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் காளியப்பன் பேசும் போது, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சாலை அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர் ரவி பேசினார். அப்போது தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு உண்டானது.
உடனே நகரசபை தலைவர் பாஷா, தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தார். அதன்பிறகு நகராட்சி கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. அதன்பிறகு குடியரசு தின விழா, நகராட்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.