தி.மு.க- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை


தி.மு.க- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
x

மதுரை மாவட்டத்தில் உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று கூடி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செல்லூர் ராஜூ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று கூடி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செல்லூர் ராஜூ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல் கூட்டம்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியின் முக்கிய 10 பிரச்சினைகளை கலெக்டர் அனிஷ்சேகரிடம் பட்டியலிட்டு வழங்கி இருந்தனர். இந்த குறைகளை சரிசெய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கூட்டத்தின் முதல் கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), கோ.தளபதி (மதுரை வடக்கு), பெரிய புள்ளான் (மேலூர்), பூமிநாதன் (மதுரை தெற்கு), வெங்கடேசன் (சோழவந்தான்), அய்யப்பன் (உசிலம்பட்டி) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை பேசினர். அதற்கான தீர்வுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, மேற்கு தொகுதிக்குட்பட்ட விளாங்குடியில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

வாக்குவாதம்

இறுதியாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலைக்கல்லூரி அமைப்பதில் ஏற்படும் இடர்பாடுகள், செலவினங்கள் குறித்து புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார். அப்போது குறுக்கிட்ட, செல்லூர் ராஜூ, நாங்கள் மக்கள் தேவைகளை சொல்லி இருக்கிறோம். அதற்கு தீர்வு தர வேண்டும். மாறாக திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கு இங்கு காரணம் சொல்ல கூடாது. இந்த காரணத்தை கேட்கவா நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்று கூறி கூட்டத்தில் இருந்து எழுந்தார். உடனே அ.தி.மு.க.வின் மற்ற எம்.எல்.ஏ.க்களும் எழுந்தனர்.

உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உங்கள் கோரிக்கை நிறைவேறாது என்று நான் சொல்லவில்லை. சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பேச்சு, உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் நான் பேச்சை நிறுத்தி கொள்கிறேன் என்று கூறி விட்டு, இது போன்று இதற்கு முன்பு ஒரு கூட்டம் நடந்திருக்கிறதா? என்று ஒரு கேள்வி எழுப்பினார். இந்த கருத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடத்திய வளர்ச்சி கூட்டத்திற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வர வில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றனர்.

உடனே அமைச்சர் மூர்த்தி தலையிட்டு, இந்த கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை ஒன்று கூடி தீர்க்க வேண்டும். எனவே அனைவரும் அமருங்கள் என்றார். அதன்பின் அனைவரும் அமர்ந்தனர். கூட்டம் தொடர்ந்து நடந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செல்லூர் ராஜூ இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட வளர்ச்சி

இந்த கூட்டம் குறித்து அதிகாரிகள் சிலர் கூறும் போது, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தால் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க., தி.மு.க. என்ற கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கூட, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் அமர்ந்து இருந்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பகுதி கோரிக்கைகளை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளையும் தந்தனர். இது மாவட்ட வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி. தொடர்ந்து இது போல் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தமிழகத்திலேயே இந்த திட்டத்தின் கீழ் முதல் கூட்டம் மதுரை மாவட்டத்தில் தான் நடந்துள்ளது என்றனர்.


Related Tags :
Next Story