தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் பாதியிலேயே எழுந்து சென்றதால் பரபரப்பு நிலவியது.
மாநகராட்சி கூட்டம்
தஞ்சை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
பூச்சந்தை இடமாற்றம்
கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க.):- தஞ்சையில் பாரம்பரியமாக உள்ள பூச்சந்தையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்து அதே இடத்தில் நடைபெறவும், அங்கு நிலவும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் சண்.ராமநாதன்:- பூக்காரத்தெருவில் சாலை விரிவாக்கப் பணி மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்க வேண்டும். இரு பிரிவாக பிரிந்திருப்பது தவறு. இது தொடர்பாக வருகிற 2-ந் தேதி நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறோம்.
இதையடுத்து, பாதாள சாக்கடை பிரச்சினை குறித்து கண்ணுக்கினியாள் பேசியபோது அவருக்கும், மேயர், தி.மு.க. கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.
சிவகங்கை பூங்கா
சசிகலா(தி.மு.க.):- சிவகங்கை பூங்கா, அகழி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் புத்தாண்டு வருவதால் கோவில், கிறிஸ்தவ ஆலயம், மசூதிகளை சுற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காந்திமதி(அ.தி.மு.க.):- வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சீர் செய்து தர வேண்டும்.
கோபால்(அ.தி.மு.க.):- எனது வார்டில் ஒரு பணியும் நடைபெறவில்லை. சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாக உள்ளது. அனைத்து கடைகள் முன்பும் சாக்கடை திறந்தவெளியில் இருப்பதால் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது.
வேலைகள் நடைபெறவில்லை
உஷா(தி.மு.க.):- 39-வது வார்டில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், வேலைகள் நடைபெறவில்லை. (இதைத்தொடர்ந்து, உறுப்பினர் உஷாவுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது).
சர்மிளாதேவி(தி.மு.க.):- ஈஸ்வரி நகர் வழியாக முத்தமிழ் நகர், பெரியார் நகர், இந்திராநகர், தேவன்நகர் வழியாக புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் அந்த சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. எனவே மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.
கையெழுத்து
எதிர்கட்சித்தலைவர் மணிகண்டன்(அ.தி.மு.க.):- தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி சந்தையில் ஏலம் எடுத்த 46 கடைக்காரர்கள் வாடகையை செலுத்த முடியவில்லை எனக்கூறி திருப்பி ஒப்படைப்பதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். உடனே மேயர் குறுக்கிட்டு "அப்படியா" என்றார்.
அதற்கு மணிகண்டன், உங்களுடைய ஒப்புதல் இல்லாமலா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உங்களது கையெழுத்து அதில் உள்ளதே என்றார்.
தி.மு.க.-அ.தி.மு.க. வாக்குவாதம்
உடனே மேயர் சண்.ராமநாதன், ஜெயலலிதா போல் நான் கையெழுத்து போடவில்லை எனக் கூறவில்லை என்றதும், அ.தி.மு.க., அ.ம.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ஜெயலலிதாவை எப்படி ஒருமையில் கூறினீர்கள் என்றனர்.
அதற்கு தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இரு தரப்பினரும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை பற்றி ஊழல்வாதிகள் எனக் குறிப்பிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேயர் பாதியிலேயே எழுந்து சென்றார்
இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு எழுந்து சென்றார். அவரைத்தொடர்ந்து அதிகாரிகளும் எழுந்து சென்றனர்.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன், எங்களின் கேள்விக்கு பதில் அளித்து விட்டு செல்லுங்கள் என கூறினார். இதையடுத்து சிறிது நேரம் கூட்ட அரங்கில் அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் காரசார விவாதம் நடந்தது.. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.