ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி - அமைச்சர் ராஜகண்ணப்பன்


ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக தி.மு.க பாடுபடும்.

அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றுமை இல்லை, அவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர். அந்த கூட்டணியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், தி.மு.க. கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தல் ஒரு ஆண்டில் வரும். அதனை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு தி.மு.க. தலைவர் ஒருபோதும் தயங்கியது கிடையாது. இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி என்று பாராட்டப்பட்டுள்ள ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அனைத்து மக்களுக்கும் சமமான நல்லாட்சி என அனைவரும் தி.மு.க.வை பாராட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாநகர தி.மு.க அலுவலகம் டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நெல்லை மாநகர தி.மு.க செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மாநகர தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story