அதிகாரிகளிடம் தி.மு.க., அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
ஆலங்குடி அருகே பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு நடந்தது.
சங்க தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி வாக்கு செலுத்த அனுமதிக்கக் கூடாது எனக்கூறி தி.மு.க.வினர் ஆதரவில் போட்டியிடுவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அ.தி.மு.க.வினரின் ஆதரவில் போட்டியிட்டவர் இன்று வரை அதிகாரிகள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தான் போதும் எனக்கூறிய நிலையில், தற்போது சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்பது முறையற்றது எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 9.10 மணி வரை நடைபெறமால் இருந்தது.
ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வாக்காளர்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது
பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 9.10 மணி அளவில் வாக்கு பெட்டியை இருதரப்பு வேட்பாளர்கள் முன்னிலையில் திறந்த வெளியில் காண்பித்த பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு பெட்டிகளை ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 8 தலைவர்கள், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில், தலைவர்களாக விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன் மற்றும் வல்லாத்திராக்கோட்டை, வாண்டான் கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் ஊர்களுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 பேரும், 10 உறுப்பினர்களும் ெவற்றி ெபற்றதாக அறிவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.
ஆதனக்கோட்டை
பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி அரசுப்பள்ளி மற்றும் அரியூர் அரசுப்பள்ளி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அரியூரை சேர்ந்த தனபால் 46 வாக்குகளும், மங்களத்துப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் 54 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து 8 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். உறுப்பினர் பதவிக்கு துரை குமாரசாமியும், ராஜேந்திரனும் போட்டியிட்ட நிலையில் துரை குமாரசாமி வெற்றி பெற்றார்.