அரசியல் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு


அரசியல் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு
x

காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்திற்காக தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்

காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்திற்காக தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

காமராஜர் ஆட்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் காமராஜர் பொற்கால ஆட்சியின் சாதனை மலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் கு.அய்யல் ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலரை வெளியிட அதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

காமராஜரின் 121-வது பிறந்தநாள் கொண்டாடும் இந்த தருணத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர வேண்டுமானால் காமராஜரின் நற்குணம் நம்மிடம் வேண்டும். அதற்கு சுயபரிசோதனை வேண்டும். காமராஜர் முதல் கேபினட் அமைச்சரவையிலேயே சமூக நீதியை நிலை நிறுத்தியவர். அதேபோல சமூக நீதியை காப்பவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடிக்கும், காமராஜருக்கும் ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வந்தால் சமுதாய மாற்றம் வந்துவிடும். காமராஜர் ஆட்சிக்கு பிறகு சொல்லும்படியாக தொழிற்சாலைகள் உருவாகவில்லை.

மீண்டும் பிரதமர் மோடிதான்

காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சர்களிடம் நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய தமிழக அமைச்சர்களிடம் இல்லை. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சருக்கு மக்களின் வரி பணம் போகிறது. செந்தில் பாலாஜிக்கு சொத்தை விற்று வேலைக்கு பணம் கொடுத்தவர்களின் ஏழ்மையும், கஷ்டமும்தான். நீதிபதியின் கண் முன் நின்று இருக்கிறது.

காமராஜர் ஆட்சிக்கு பிறகு 22 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்துக்கு பிரதமர் மோடியால் 11 மருத்துவ கல்லூரி வந்துள்ளது. பா.ஜ.க.வை நோக்கி இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 3-வது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்திலும் மாற்றம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் லாபம்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

வருகிற 23-ந் தேதி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் 1,200 பஞ்சாயத்துகளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறும் காங்கிரஸ் முதல்-மந்திரி, துணை மந்திரி மீது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கண்டன குரலை பதிவு செய்யாமல் வந்தால் வருகிற 18-ந் தேதி பா.ஜ.க. சார்பில் கருப்புக்கொடி போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்துவோம்.

அமைச்சர் துரைமுருகன் அரசியல் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக கர்நாடகா மீது ஒரு கண்டன குரலை கூட எழுப்பவில்லை. தமிழகத்தின் உரிமைகளை அரசியல் லாபத்திற்காக தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது. சண்டை போட வேண்டாம். தமிழக மக்களின் குரலாக முதல்-அமைச்சரின் குரல் இல்லையே என்பதுதான் எங்களுடைய வருத்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாமரை மலரும்

விழாவில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர். ஜி.கே.வாசன், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜி.கே.வாசன் எம்.பி. கூறுகையில், காவிரியில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று டெல்டா விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கி இருக்கிறது என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது,, தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டும்.அதற்காக மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக இருந்தால் தாமரை ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றார்.தமிழருவி மணியன் கூறியதாவது, தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க., காமராஜர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டணி இங்கிருந்து புறப்படும். பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும். தி.மு.க.வின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை களம் கண்டு வருகிறார். மாற்று அரசியல் வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story