கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி உள்பட 15 அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி உள்பட 15 அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் தி.மு.க. மாணவர் அணி உள்பட 15 அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

சென்னை,

பல்கலைக்கழக பட்டமளிக்கும் கடமையை செய்ய மறுத்தல், துணை வேந்தர்களை நியமிப்பதில் தேவையற்ற தாமதம் செய்தல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மருத்துவ பல்கலைக்கழகங்களின் கலந்தாய்வை நடத்த முற்படும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சின்னமலை சந்திப்பு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் நிதி பொறுப்பாளர் பிரின்ஸ், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணை செயலாளர் தயா நெப்போலியன், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணை தலைவர் அல் அமீன் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பா.ஜ.க.வின் ஊதுகுழல்

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சி.வி.எம்.பி.எழிலரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தாததால் ஏராளமான மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். 22-ந் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் நேரம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதேபோல மற்ற பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாவினை நடத்தவேண்டும். கவர்னர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார். இது அவருக்கு அழகல்ல. கவர்னராக அவர் செயல்பட்டால் மதித்து நடக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அவர் அரசியல்வாதிகளை போன்று செயல்படுகிறார்.

கவர்னர் அரசியல் செய்ய வேண்டும் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக பா.ஜ.க. தலைவராக கமலாலயத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளலாம். அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கு நின்றாலும் அவரை விரட்டுவோம். தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் காஞ்சீபுரத்தில் நின்று பார்க்கட்டும். நாகாலாந்தில் செய்த கலவரத்தை போன்று தமிழகத்தில் செய்ய நினைக்கவேண்டாம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story