திட்டக்குடி அருகே காதணி விழாவில் தகராறு: திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகரை வழிமறித்து தாக்குதல்
திட்டக்குடி அருகே காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில், தி.மு.க. கவுன்சிலர், அ.தி.மு.க. பிரமுகர் சென்ற காரை பா.ம.க. பிரமுகர் வழிமறித்து அடித்து நொறுக்கி, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநத்தம்,
திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 50). இவர் மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருடைய உறவினர் அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(58). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கொரக்கை கிராமத்தில் நடந்த காதணி விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது அதே விழாவில் கலந்து கொண்ட கொரக்கையை சேர்ந்த பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன்(49) என்பவருக்கும், சங்கர், செல்வராஜ் தரப்பினருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
வழிமறித்து தாக்குதல்
பின்னர், விழா முடிந்து காரில் சங்கர், செல்வராஜ் ஆகியோர் ஆலம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கொரக்கை கிராமத்திற்கு அருகே உள்ள தரைப்பாலத்தில் கார் வந்த போது, அங்கு இருந்த கண்ணன் அவர்களை வழிமறித்து, சவுக்கு கட்டையால் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தார். மேலும், சங்கர், செல்வராஜ் ஆகியோரையும் தாக்கி இருக்கிறார்.
அப்போது, வயலில் வேலை பார்த்தவர்கள் ஓடிவந்து, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருதரப்பு புகார்
இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணன் மீது ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தன்னை சங்கர், செல்வராஜ் தரப்பினர் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி, திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.