தி.மு.க. கவுன்சிலர் படுகொலை: மதுவிற்பனையை தட்டி கேட்டது காரணமா?


தி.மு.க. கவுன்சிலர் படுகொலை: மதுவிற்பனையை தட்டி கேட்டது காரணமா?
x

படப்பை அருகே தி.மு.க. ஊராட்சி கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரம் எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர், நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், தி.மு.க. வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இவருக்கும். அதே ஊரில் வசிக்கும் தி.மு.க.வை சேர்ந்த எஸ்தர் என்ற லோகேஸ்வரி (37) என்பவருக்கும் கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் எஸ்தர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதாகவும், இதனை சதீஷ் தடுத்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே பகை முற்றியதாகவும் கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இது தொடர்பாக அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சதீசை நேற்று மதியம் எஸ்தர் தனது வீட்டுக்கு அழைத்தார். அதன்படி அவரது வீட்டுக்குள் சென்றவுடன் கதவை தாழ்ப்பாள் போட்டு அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள் சதீசை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலை வெளியில் இழுத்து வந்து சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உட்கட்சி மோதலால் இந்த கொலை நடைபெற்றதா? அல்லது மது விற்பனை தடுக்கப்பட்டதால் நடத்தப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள எஸ்தர் என்ற லோகேஸ்வரி மற்றும் மர்மகும்பலையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story