'தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'- அண்ணாமலை குற்றச்சாட்டு
“தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று கோவில்பட்டியில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கோவில்பட்டி:
"தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" என்று கோவில்பட்டியில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மாற்றத்திற்கான மாநாடு
கோவில்பட்டி சாலைப்புதூர் திடலில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா அனைத்து அணிகள் மற்றும் பிரிவுகள் சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னை கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டில் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தூத்துக்குடி மண் வீரம் விளைந்த மண். வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வீரன் அழகுமுத்துக்கோன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டம்.
தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தூத்துக்குடியில் மாற்றம் வந்துவிட்டது. இந்த மாற்றம் 2024-ல் தெரியும். தேர்தல் வர 17 மாதங்கள் உள்ளது. 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.
சமூக நீதி இல்லை
லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை தான் தமிழகத்தில் உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் பேசுவதை பார்க்கும்போது அங்கு சமூகநீதி இல்லை. பால் விலை, மின்சார கட்டணம் உயர்த்தியதால் மகளிருக்கு பாதிப்பு. மகளிர் இலவச பஸ்சில் பயணம் செய்தால் ஓசி பயணம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். வாக்கு அளிக்கும் வரையில் தான் நமக்கு மவுசு. அது தி.மு.க. ஆட்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பெண்களை மதிக்க தெரியாத கட்சியாக தி.மு.க. மாறி உள்ளது.
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றம் நிச்சயம்
தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அண்ணாமலையை யார் அதிகமாக திட்டுகிறார்களோ அவர்களுக்கு தி.மு.க. விருது வழங்கி வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதி இல்லை, 39 தொகுதிகளையும் வெல்ல முடியும் என்று கூற முடியும். தமிழகத்திற்கு 5 மத்திய மந்திரிகள் உறுதி. அதற்காக பா.ஜனதா தொண்டர்கள் உழைக்க வேண்டும். புலம்பல் அதிகமாக கேட்டால் நாம் சரியாக போகிறோம் என்று அர்த்தம். தமிழகத்தில் மாற்றம் நிச்சயம்
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மகளிர் அணி கலையரசி, இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், வர்த்தக பிரிவு தலைவர் ராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.