மாநில உரிமைக்கு தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும்
மாநில உரிமைக்கு தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும் என்று சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மாநாடு
திராவிடர் விடுதலை கழகம் சார்பில், இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாடு சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று நடந்தது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, மனித உரிமையை பெற்று தந்தவர் தந்தை பெரியார். அரசியலை இன்னமும் நிர்ணயிப்பது பெரியாரும், அவரது பேச்சும் தான். மக்களுக்காகவே அவர் பேசி வாழ்ந்த வரலாறு உண்டு. ஆனால் அவர் என்ன சாதித்தார்? என்று கேட்கிறார்கள். 1973-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இருக்கக்கூடாது என்று கொண்டு வந்து செய்து காட்டினார். சாதிக்கு எதிராகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடினார்.
திராவிட மாடல் ஆட்சி
ஆனால் தமிழகத்தின் உரிமையை டெல்லியில் அ.தி.மு.க.வினர் அடமானம் வைத்துவிட்டார்கள். அவர்களால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. சட்டமன்ற தேர்தலின்போது, நமது முதல்-அமைச்சருக்கு கட்டம் சரியில்லை. ஜாதகம் சரியில்லை, அவர் முதல்-அமைச்சராக ஆக முடியாது? என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பால் தேர்தலில் வென்று, நாடு போற்றும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அரசியல் ரீதியாகவும், கொள்கைகள் ரீதியாகவும் பாசிச சக்திகளுக்கு எதிரியாக இருக்கிறோம். அவர்களால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. அதற்கு தந்தை பெரியார் என்ற தடுப்புச்சுவர் தான் காரணம். மற்ற மாநிலங்களை விட தமிழகம் 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
ஆனால் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற எவ்வளவோ முயற்சி நடக்கிறது. மாநில உரிமைக்கு தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும். சமூக நீதி தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். சட்டமன்ற தேர்தலைபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாசிச சக்திகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு அனைத்து இயக்கங்களும் தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் ஏராளமானவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.