தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தீக்குளித்து தற்கொலை
நெமிலி அருகே தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெமிலி அருகே தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் தலைவர்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி ரேவதி (வயது 35). தி.மு.க.வை சேர்ந்த இவர் அசநெல்லிகுப்பம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிகிச்சை பலனின்றி சாவு
தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.